உத்தமபாளையம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்ட கலெக்டர்


உத்தமபாளையம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 28 Aug 2021 4:16 PM GMT (Updated: 28 Aug 2021 4:16 PM GMT)

உத்தமபாளையம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

உத்தமபாளையம்:
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி அருகே அவர் சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. 
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்ததுடன், சாலையில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். 
இதற்கிடையே தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனை சாவடியில் ஆய்வு பணியை முடித்துவிட்டு, விபத்து நடந்த சாலை வழியாக மாவட்ட கலெக்டர் முரளிதரன் வந்தார். அப்போது சாலையில் ராமச்சந்திரன் மயங்கி கிடப்பதை பார்த்த அவர், உடனடியாக தனது காரை நிறுத்தினார். பின்னர் அவர், ராமச்சந்திரனை மீட்டு ஆட்டோ மூலம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ராமச்சந்திரனை கலெக்டர் கைத்தாங்கலாக சிகிச்சை அளிக்கப்படும் வார்டு பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் மருத்துவக்குழுவினர் ராமச்சந்திரனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
விபத்தில் சிக்கிய தொழிலாளியை தக்கதருணத்தில் மீட்டு சிகிச்சை பெற உதவிய கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கு காரணமாக மர்மநபரை தேடி வருகின்றனர்.

Next Story