நாகூர் தர்கா ஆதீனத்துக்கு கத்திக்குத்து


நாகூர் தர்கா ஆதீனத்துக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 28 Aug 2021 4:16 PM GMT (Updated: 2021-08-28T21:46:49+05:30)

நாகூர் தர்கா ஆதீனத்தை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்:
நாகூர் தர்கா ஆதீனத்தை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கத்திக்குத்து
நாகையை அடுத்த நாகூர் தலைமாட்டு தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது மகன் ஷேக்முகமது (வயது 38). இவர் நாகூர் தர்கா ஆதீனமாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஷேக் முகமது தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். 
அப்போது அவரது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஷேக் முகமது படுக்கையில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்தார்.
விரட்டிப்பிடித்தனர்
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த மர்ம நபர் தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். இதை சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. கத்திக்குத்தில் காயம் அடைந்த ஷேக்முகமது வலி தாங்காமல் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகூர் தர்கா  ஆதீனத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற நபரை விரட்டிச்சென்று பிடித்தனர். 
மருத்துவமனையில் அனுமதி
இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் மற்றும் போலீசார் வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மதுரை சிங்கம் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த ராஜா(26) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கத்தி குத்தில் காயம் அடைந்த ஷேக் முகமதுவையும், பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த ராஜாவையும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து ஷேக் முகமதுவை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது 
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Next Story