கூடலூரில் வாய்க்கால் உடைப்பை சரி செய்யக்கோரி விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
கூடலூரில் பாசன வாய்க்கால் உடைப்பை சரிசெய்யக்கோரி விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூடலூர்:
கூடலூரில் பாசன வாய்க்கால் உடைப்பை சரிசெய்யக்கோரி விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாய்க்காலில் உடைப்பு
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெட்டுக்காடு, கப்பாமடைகுளம், தாமரைக்குளம், ஒட்டாண்குளம், பாரவந்தான், ஒழுகுவழி, பி.டி.ஆர்.வட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பகுதியில் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்தநிலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து கப்பாமடைகுளம் பகுதி பாசனத்திற்காக தண்ணீர் வரும் சாமி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் வரும் தண்ணீர், வயல்வெளிகளுக்கு வராமல் திசைமாறி காலி இடத்தில் பாய்ந்து வீணாகி வருகிறது. இதனால் கப்பாமடைகுளம் பகுதியில் வயல்களில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாய்க்கால் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தினர். ஆனால் வாய்க்கால் உடைப்பை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த கூடலூர் பகுதி விவசாயிகள் நேற்று கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதுவரையில் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் திடீரென்று தங்களது கையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டில்களை கைப்பற்றினர்.
பேச்சுவார்த்தை
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது சிலர் வரமறுத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் ேபாலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி கூடலூருக்கு விரைந்து வந்தார். அப்போது அவர், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பிரேம்குமாரை வரவழைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் வாய்க்கால் உடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உதவிப்பொறியாளர் உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் சமரசம் ஆனார்கள்.
விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கூடலூரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story