உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பரத்ஸ்ரீதருக்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு


உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பரத்ஸ்ரீதருக்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 10:21 PM IST (Updated: 28 Aug 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

கென்யாவில் நடந்த உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பரத்ஸ்ரீதருக்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம், 

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்ட விழுப்புரத்தை சேர்ந்த 18 வயதான பரத்ஸ்ரீதர், கலப்பு தொடர் ஓட்டத்தில் இலக்கை நோக்கி உத்வேகத்துடன் ஓடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்ததோடு விழுப்புரம் மண்ணுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை படைத்த பரத்ஸ்ரீதர், கென்யாவில் இருந்து தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

விழுப்புரம் வீரருக்கு  உற்சாக வரவேற்பு

புவனேஸ்வர்-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று காலை  விழுப்புரம் வந்து இறங்கிய தடகள வீரர் பரத்ஸ்ரீதருக்கு முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் தலைமையில் நகர மக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர், பரத்ஸ்ரீதரை தோளில் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதன் பிறகு பரத்ஸ்ரீதருக்கு நமது நாட்டின் தேசியக்கொடியை போர்த்தி விழுப்புரம் நகரில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு வழிநெடுக பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் பொதுமக்கள் வரவேற்றனர். பின்னர் விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பரத்ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கலெக்டர் வாழ்த்து

விழாவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் கலந்துகொண்டு, பரத்ஸ்ரீதருக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பரத் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கூடைப்பந்து சங்க தலைவர், மாவட்ட தடகள சங்க தலைவர் ஆகியோருக்கும் கலெக்டர் டி.மோகன், பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், தடகள சங்க தலைவர் புஷ்பராஜ், கூடைப்பந்து சங்க தலைவர் ஜனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் 

இதையடுத்து தடகள வீரர் பரத்ஸ்ரீதர், நிருபர்களிடம் கூறுகையில், உலக அளவிலான போட்டியில் நான் பதக்கம் வெல்ல காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் ஆசியா அளவிலான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே எனது லட்சியம், அதற்காக எனது கடின உழைப்பை தொடர்ந்து மேற்கொண்டு நிச்சயம் தங்கம் வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story