தங்க கடத்தல் கும்பலுடன் போலீஸ்காரர் கைது
பல்லடத்தில் கார் டிரைவரை கடத்திய வழக்கில் புதிய திருப்பமாக தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கோவை போலீஸ்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்
பல்லடத்தில் கார் டிரைவரை கடத்திய வழக்கில் புதிய திருப்பமாக தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கோவை போலீஸ்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கார் டிரைவர் கடத்தல்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த ஜெயபால் மனைவி பாக்கிய லட்சுமி வயது 60. இவரது வீட்டில் வாடகைக்கு சிவகங்கையை சேர்ந்த கார்டிரைவர் சக்தி என்கிற மகேஸ்வரன் 33 குடியிருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்கியலட்சுமி தனது பேத்தியுடன் தாராபுரத்துக்கு காரில் சென்றார். மகேஸ்வரன் காரை ஓட்டினார்.
பின்னர் தாராபுரம் சென்று விட்டு 3 பேரும் திருப்பூர் திரும்பினர். கார் பல்லடம் அருகே வந்தபோது மகேஸ்வரனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. உடனே மகேஸ்வரன் செல்போனை எடுத்து பேசினார். அப்போது எதிர்முனையில் மகேஸ்வரனின் நண்பர் அழகர்சாமி, பேசுவதாகவும், தற்போது பல்லடத்தில் இருப்பதாகவும், உன்னை சந்தித்து பேச வேண்டும் என கூறியதாக, கூறப்படுகிறது.
இதையடுத்து பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில்லில் நண்பர் ஒருவரை 10 நிமிடங்களில் பார்த்துவிட்டுச் செல்லலாம். என மகேஸ்வரன், காரில் இருந்த பாக்கியலட்சுமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து கார் கோவை திருச்சி மெயின் ரோட்டில் லட்சுமி மில் நோக்கி சென்று கொண்டிருந்தது. கார் பெரும்பாலி என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 கார்கள், மகேஸ்வரன் பின் தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் அந்த 3 கார்களும், மகேஸ்வரன் ஓட்டிச் சென்ற காரை வழிமறித்தது. இதனால் மகேஸ்வரன் காரை நிறுத்தினார்.
அப்போது மற்ற 3 காரில் இருந்து இறங்கிய சிலர், மகேஸ்வரனை இறங்கச் சொல்லி மிரட்டினார்கள். ஆனால் அவர் மகேஸ்வரன் காரில் இருந்து இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து அந்த ஆசாமிகள் மகேஸ்வரனை அவர்கள் வந்த காரில் கடத்திச் சென்றனர். மகேஸ்வரன் ஓட்டிவந்த காருக்குள் அமர்ந்திருந்த பாக்கியலட்சுமி, இறங்கி வருவதற்குள் அந்த ஆசாமிகள், மகேஸ்வரனை கடத்தி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், மற்றும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உடுமலை அருகே மடத்துக்குளம் சோதனைச்சாவடியில் கடத்தல் கும்பல் வந்த காரை போலீசார் மறித்தபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் காரை துரத்தி சென்றனர். இதனால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள காட்டுப் பகுதிக்குள் காரை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செங்கல்சூளை பகுதியில் கடத்தப்பட்ட மகேஸ்வரன் மற்றும் 2 பேர் இருந்தனர். அந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை செய்தபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேவுகரத்தினம் மகன், வீரமணிகண்டன் 28 , மற்றொருவர் சிவங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பூசைத்துரைமகன் அழகர்சாமி 33 என்பதும் தெரியவந்தது. இந்த 2 பேரும், மகேஸ்வரனை போன்றே அந்த கும்பலால் கடத்தி வரப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து 3 பேரையும் போலீசார் மீட்டு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு , அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
புதிய தகவல்
மகேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த தங்கம் கடத்தலில் ஈடுபடும் தொழிலதிபர் குட்லக் ராஜேந்திரன் என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த தொழிலதிபர் கடத்தல் தங்கத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மகேஸ்வரனிடம்தான் கொடுத்து அனுப்புவார். ஒருமுறை 5 கிலோ கடத்தல் தங்கத்தை மகேஸ்வரனிடம் கொடுத்து அனுப்பினார். அப்போது ராமநாதபுரத்தில் போலீசார் துரத்தியதாகவும் அதிலிருந்து தப்பிக்க தங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு, தான் மட்டும் தப்பியதாகவும் குட்லக் ராஜேந்திரனிடம், கார் டிரைவர் மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இதனை ஏற்காத குட்லக் ராஜேந்திரன், தங்கம் கடத்தலில், ஈடுபடும் அவரது கூட்டாளிகளான, யாசர் அராபத், முகம்மது ரிஸ்வான் ஆகியோரிடம் மகேஸ்வரனை ஒப்படைத்துள்ளார்.
அவர்கள் மகேஸ்வரனை மறைவான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஒரு வாரகாலம் அங்கு இருந்த மகேஸ்வரன், அங்கிருந்து தப்பி கடந்த 2 மாதங்களுக்கு முன் திருப்பூர் வந்துள்ளார். இங்கு தனது பெயரை சக்தி என மாற்றிக்கொண்டு, கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மகேஸ்வரனின் நண்பர்கள் வீரமணிகண்டன், அழகர்சாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது மகேஸ்வரன் திருப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதை அறிந்து மகேஸ்வரனை பிடிக்க தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் தங்களது நண்பரான கோவையைச் சேர்ந்த போலீஸ்காரர் ராஜேஸ்வரன் மற்றும் குட்லு, அன்பு, கார்த்தி, பாண்டி மற்றும் சிலருடன், திருப்பூரிலிருந்து மகேஸ்வரனை பிடிக்க திட்டமிட்டனர்.
அதற்கு முன்பாக கடந்த 25ந் தேதி அன்று வீரமணிகண்டன் அழகர்சாமி ஆகிய இருவரையும், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து கடத்தி சென்றுள்ளனர். அதன்பின்னர் 26ந் தேதி அழகர்சாமி மூலம் போனில் அழைத்து மகேஸ்வரனை வரவழைத்து, காரில் கடத்தி உள்ளனர். ஆனால் போலீசார் துரத்தவே 3 பேரையும் கடத்தல் கும்பல் திண்டுக்கல் கீரனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் இறக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முகம்மது ரிஸ்வான், யாசர் அரபாத் மற்றும் தொடர்புடையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று கீரனூர் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கார் வந்துள்ளது. காரை நிறுத்தி அதில் இருந்தவர்களை, போலீசார் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு, கொண்டுவந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வான் 34, யாசர் அரபாத்34 என்பதும் கார் டிரைவர் மகேஸ்வரனை கடத்தியதும் தெரியவந்தது.
மேலும் இவர்களது கூட்டாளியான கோவை மாநகரில், பணிபுரியும் போலீஸ்காரர் ராஜேஸ்வரன் 27 பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், போலீஸ்காரர் ராஜேஸ்வரனை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தலைமறைவு குற்றவாளிகளை, தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் பிடிபட்டால், தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
----
Reporter : P. Arjunan Location : Tirupur - Palladam
Related Tags :
Next Story