புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 10:36 PM IST (Updated: 28 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், 

புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு காரில் போலி மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்படுவதாக கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பண்ருட்டி ரெயில் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். 

போலீசாரை பார்த்ததும், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தங்கள் ஜீப்பில் பண்ருட்டி லிங்க் ரோட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று, அந்த காரை மடக்கினர்.

காரில் கடத்தல்

பின்னர் காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன் மகன் பரத் என்கிற பரத்குமார் (வயது 20), புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த ஆரியப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர் (32) என்பதும், புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி பகுதிக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி, அதில் தமிழகத்தில் விற்பனையாகும் மதுபாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் போன்று, போலியான ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது.

ரூ.2 லட்சம்

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பரத், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1440 போலி மதுபாட்டில்கள் மற்றும் 100 லிட்டர் சாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு தமிழக மதுபாட்டில்களில் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் போன்று போலியாக தயாரித்து, அதனை மதுபாட்டில்களில் ஒட்டி, கடலூர் மாவட்டத்துக்கு கடத்தி வந்து குறைந்து விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவது தொடர்பாக புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Next Story