4 பேர் கைது
கர்நாடக மாநிலம், மைசூர் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவினாசி பகுதியைச் சேர்ந்த 4 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
சேவூர்
கர்நாடக மாநிலம், மைசூர் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவினாசி பகுதியைச் சேர்ந்த 4 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கூட்டு பாலியல் பலாத்காரம்
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படிக்கும் இவருடைய காதலரும் கடந்த 24ந் தேதி மாலை ஒரு காரில் மைசூரு சாமுண்டிமலை அடிவாரத்தில் இருக்கும் லலிதாதிரிபுரா பகுதிக்கு சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு இருவரும் அமர்ந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இவர்களை கவனித்துக்கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அங்கு வந்து அவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியது. ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மாணவியின் காதலனை சரமாரியாக தாக்கினர். இதில் காதலன் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல் கல்லூரி மாணவியை தூக்கிக்கொண்டுபுதருக்குள் சென்று விட்டனர். அங்கு 6 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அதன்பின்னர் அந்த மாணவியையும், அவருடைய காதலனையும் மீண்டும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து படுகாயங்களுடன் கிடந்தவர்களை அங்கு வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மைசூரு ஆலனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தமிழில் பேசியதாக தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த நேரத்தை கணக்கீட்டு அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கூலிவேலைக்கு வந்த அவர்கள் இது போன்ற காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் மட்டுமல்ல நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிடும்படி கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
4 பேர் கைது
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஆசாமிகள் சேவூர் அருகே பேரநாயக்கன்புதூர் தண்ணீர்பந்தல் செல்வபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரகாஷ் என்கிற அரவிந்த் வயது 21, லூர்துபுரத்தில் தலைமறைவாக இருந்த ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசையபுரத்தைச்சேர்ந்த சூசையப்பன் மகன் ஜோசப் 28, லூர்துபுரம் கருவலங்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகேசன்22, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு அழைத்துச்சென்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சேவூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story