கல்வராயன்மலையில் 2 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மலைவாழ் மக்கள் சாலை மறியல்


கல்வராயன்மலையில் 2 மாதங்களாக  ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மலைவாழ் மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Aug 2021 5:11 PM GMT (Updated: 28 Aug 2021 5:11 PM GMT)

கல்வராயன்மலையில் 2 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கச்சிராயப்பாளையம்

ரேஷன் கடை

கச்சிராயப்பளையம் அருகே உள்ள கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள இந்நாடு கிராமத்தில் சேராப்பட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலமாக இன்னாடு, கிணத்துவளவு, காட்டுவளவு, தேக்குமரத்துவளவு, குளிப்புலி, கொட்டபூண்டி, மதுரைக்காடு உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டமலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்த  மலைவாழ் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்ததால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 
பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் நேற்று இந்நாடு-வெள்ளிமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கரியாலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மழைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
கல்வராயன்மலையில் 2 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மலைவாழ்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் இந்நாடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story