ஐதராபாத் என்ஜினீயரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி; நாலுமாவடி பெண் கைது
திருமண இணையதளம் மூலம் ஐதராபாத் என்ஜினீயரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்த நாலுமாவடியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
திருமண இணையதளம் மூலம் ஐதராபாத் என்ஜினீயரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்த நாலுமாவடியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே செகந்திராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வாசுதேவன் (வயது 34). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது திருமணத்திற்காக ஒரு திருமண வரன் பார்க்கும் இணையதளத்தில் மணப்பெண் தேடி வந்தார்.
அந்த இணையதளத்தில் திவ்யா (28) என்ற ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டி.யை வாசுதேவன் பார்த்துள்ளார். அந்த பெண் அவருக்கு பிடித்து இருந்ததால் வாசுதேவன் தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்து உள்ளார். மறுமுனையில் திவ்யாவும் வாசுதேவனை பிடித்திருக்கிறது என்று சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். பின்னர் 2 பேரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.
ரூ.80 ஆயிரம்
இந்த நிலையில் திவ்யா தன்னுடைய தோழிக்கு அவசரமாக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது என்று கூறி ஒரு வங்கி கணக்கை வாசுதேவனுக்கு அனுப்பி அதில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய வாசுதேவனும் அந்த வங்கிக்கணக்கில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி ரூ.40 ஆயிரம் அனுப்பினார். மீண்டும் திவ்யா பணம் தேவைப்படுவதாக கூறியதையடுத்து வாசுதேவன் கடந்த 4-ந் தேதி அதே வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து வாசுதேவன், திவ்யாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி முகவரி கேட்டுள்ளார். அவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரி கொடுத்துள்ளார். அங்கு சென்று வாசுதேவன் விசாரித்தபோது திவ்யா என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வாசுதேவன் அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து வாசுதேவன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா (36) என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, கீதா தான் திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் அவரது உண்மையான புகைப் படத்தை பதிவேற்றம் செய்யாமல் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, வாசுதேவனிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெண் கைது
மேலும், விசாரணையில் வாசுதேவனை ஏமாற்றியது போல் 20-க்கும் மேற்பட்ட நபர்களை கீதா ஏமாற்றி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் கீதாவை போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக சிலர் கொடுக்கும் தகவல்களை உறுதிபடுத்தாமல், அவர்களை நம்பி பொதுமக்கள் தங்களது சுய விவரங்களையோ, புகைப்படத்தையோ மற்றும் பணத்தையோ அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமண இணையதளம் மூலம் ஐதராபாத் என்ஜினீயரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்த நாலுமாவடியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story