கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்


கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 28 Aug 2021 11:08 PM IST (Updated: 28 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் தற்போது தங்களது விளைநிலத்தில் கடலை விதை விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லல், 
கல்லல் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் தற்போது தங்களது விளைநிலத்தில் கடலை விதை விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலை சாகுபடி
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் மாலை நேரங்களில் பெய்து வருவதால் வறண்டு கிடந்த பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து வரத் தொடங்கி உள்ளது. 
இதையடுத்து இந்தபகுதி விவசாயிகள் தொடர்ந்து டிராக்டர் மற்றும் காளை மாடுகளை வைத்து மீண்டும் மற்றொரு உழவு பணி செய்து கடலை சாகுபடிக்காக விதை விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கல்லல் அருகே சடையன்பட்டி கிராமத்தில் கடலை சாகுடி விதைப்பு செய்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிர் மட்டும் பயிரிட்டு வந்தனர். 
அதிக லாபம்
தொடர்ந்து இந்த மாவட்டத்தில் கடந்த காலங்களில் போதிய மழை பெய்யாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடிகளை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்ற நிலையில் மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையடுத்து குறுகிய கால சாகுபடி பயிராக வேர்க்கடலை பயிரிட முடிவு செய்து தற்போது விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். 
மேலும் இந்த பயிர்க்காக எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவை பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து களை எடுத்தல் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றை செய்ய வேண்டும். தொடர்ந்து பயிர்களில் பூச்சி தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் உரம் இட வேண்டும். 
குறுகிய கால பயிர்
இவ்வாறு தொடர்ந்து பராமரிப்பு செய்வதால் விரைவில் குறுகிய கால பயிராக அறுவடையை எட்டி விடும். இதுதவிர பல்வேறு இடங்களில் உளுந்து, துவரை உள்ளிட்ட பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அதிக லாபம் தரும் இந்த நிலக்கடலை சாகுபடியை படித்த இளைஞர்கள் முதல் அனைவரும் இதில் ஈடுபட்டு லாபத்தை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story