நாட்டுவெடிகுண்டை கடித்த நாய் வாய் சிதறி பலி
நாட்டுவெடிகுண்டை கடித்த நாய் வாய் சிதறி பலி
வேலூர்
வேலூர் அருகே நாட்டுவெடிகுண்டை கடித்த நாய் வாய் சிதறி பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் பலி
விரிஞ்சிபுரம் அருகே அன்பூண்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. வேலூரில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளது. இரவில் மலைப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
எனவே விவசாய பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் இறைச்சியுடன் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணி அளவில் கிராமத்தில் உள்ள பள்ளத்தெருவில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது அங்கு வாய் சிதறிய நிலையில் தெருநாய் ஒன்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
மேலும் நாயின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அப்துல்லாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
தெருநாய் ஒன்று நாட்டுவெடிகுண்டை கவ்வி கொண்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதுவெடித்தது. இதனால் நாய் பலியானது. இதில் பொதுமக்களுக்கு காயம் ஏற்படவில்லை. விவசாய நிலங்களில் வைக்கப்பட்ட வெடியை நாய் கவ்விக்கொண்டு வந்ததா?, வீட்டில் இருந்த நாட்டுவெடிகுண்டை கவ்விக்கொண்டு வந்ததா?, நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தி வந்தது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----
Reporter : T. ALWIN_Staff Reporter Location : Vellore - VELLORE
Related Tags :
Next Story