குடிநீர் குழாய் மாற்றும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
லாலாபேட்டை அருகே குடிநீர் குழாய் மாற்றும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது.
லாலாபேட்டை,
புதிய குடிநீர் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மகாதனபுரம் காவிரியில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மேட்டு மகாதானபுரம், ஓமாந்தூர் குப்பு ரெட்டிபட்டி வழியாக பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு காவிரி குடிநீர் செல்கிறது.
இந்த நிலையில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் புதிய குடிநீர் திட்டம் தொட்டியபட்டி வழியாக பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் செயல்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
இந்த புதிய குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் இணைப்பு கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழைய குடிநீர் திட்டத்தில் தராமல் புதிதாக காவிரியில் இருந்து கிணறு அமைத்து கொண்டு வர வேண்டும் என ஓமாந்தூர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பழைய இடத்திலேயே இணைப்பு கொடுத்தால் தங்கள் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறி ஏற்கனவே பலமுறை மறியல் போராட்டம் செய்து உள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம்
இந்த நிலையில் மேட்டு மகாதானபுரம் பிரிவு சாலை அருகே பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. இதையறிந்த ஓமாந்தூர் பொதுமக்கள் புதிய திட்டத்திற்கு குடிநீர் இணைப்பு கொடுக்கத்தான் பள்ளம் தோண்டுவதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனால் குடிநீர் குழாய் மாற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குழாய் உடைப்பு
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு செல்லும் பழைய குடிநீர் திட்ட குழாயில் பி.வி.சி. பிளாஸ்டிக் பைப் உள்ளது. இதனால் சட்டவிரோதமாக சிலர் குடிநீர் எடுக்கின்றனர். அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது.
இதனை சரி செய்யும் பொருட்டு குடிநீர் குழாய் மாற்றும் பணிகள் நடைபெற்றது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த பணி நிறுத்தப்பட்டது என்றனர்.
Related Tags :
Next Story