உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வைகைச்செல்வன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அக்கட்சியின் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் கூறினார்.
காட்பாடி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அக்கட்சியின் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம் காந்திநகரில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்.ஏ.ராஜா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி, பொருளாளர் எம்.மூர்த்தி, துணைச் செயலாளர் ஜெயப்பிரகாசம், காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சுபாஷ், பகுதி செயலாளர்கள் பேரவை ரவி, எஸ். குப்புசாமி, அணிகளின் மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், எஸ்.பி.ராகேஷ், சுந்தரராஜி, மருத்துவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சுகன்யாதாஸ் மற்றும் பி.எஸ்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடருமா என்பது குறித்து தலைமை தான் அறிவிக்கும். வேளாண் திருத்த சட்ட மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் ஆதரித்தோம். அதே நிலைப்பாடு தான் தற்போதும் தொடர்கிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என கூறி விட்டதால் அதை பற்றி இப்போது பேச முடியாது.
வெள்ளை அறிக்கை
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதல் கண்டனத்தை அ.தி.மு.க.தான் தெரிவித்தது. எழுத்தாளர்கள் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தில் மீண்டும் வைக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.நிறைவேற்றவில்லை. கேட்டால், 100 நாள் தானே ஆட்சி நடந்துள்ளது என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு பொதுமக்களிடம் தி.மு.க.வினர் மனுக்களை வாங்கினார்கள். அவற்றில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் இப்போது மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு படிக்க வேண்டும் என்கிறார்கள். மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் கட்டுவதற்கும், மதுரையில் நூலகம் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். நிதி இல்லை, நிதி இல்லை என்கிறார்கள். இதற்கு எப்படி நிதி வந்தது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story