23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர்- லாரி பறிமுதல்; 2 பேர் கைது


23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர்- லாரி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 1:17 AM IST (Updated: 29 Aug 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் அருகே, அரசு அனுமதியின்றி குறைந்த விலைக்கு டீசல் விற்பனை செய்ததையடுத்து 23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர்- லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்தனர்.

கீழப்பழுவூர்:

வயல்வெளியில் விற்பனை
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் வயல்வெளியில் பெரிய டேங்கர் லாரி மூலம் அரசின் அனுமதி இல்லாமல் டீசல் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி சரக பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் சார்பில் கீழப்பழுவூர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அரியலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கல்பனா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர், அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் குறைந்த விலைக்கு டீசல் விற்பதாக தெரிவித்து, 23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் இருந்த டேங்கர் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். டேங்கர் லாரி மூலம் சிமெண்டு ஆலைகளுக்கு இயங்கக்கூடிய கனரக வாகனங்களுக்கு டீசல் விற்பனை செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் மேற்பார்வையாளர் ஷாருக்முகமது மற்றும் டேங்கர் லாரி டிரைவர் ஜெயபிரகாஷ் என்ற ராஜபாரதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 ரூபாய் குறைத்து டீசல் விற்பனை செய்ததால், இது தரமான டீசலா அல்லது பயோ டீசலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டீசல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கூறுகையில், இதுபோன்று குறைவான விலையில் டீசல் விற்பனை செய்வதால் அரசிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பயோடீசல் என்று கூறி விற்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் டீசல் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தரமான டீசலா அல்லது பயோடீசலா, ஒருவேளை தரமான டீசல் என்றால் அவர்களுக்கு குறைந்த விலையில் டீசல் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story