கடன் வாங்கியவர் தாக்கியதால் விவசாயி தற்கொலை முயற்சி; 2 பேர் மீது வழக்கு
கடன் வாங்கியவர் தாக்கியதால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த இன்னாசியின் மகன் தீத்துஸ்மெர்லின்ராஜ். விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் எட்வேட்(வயது 52). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தீத்துஸ்மெர்லின்ராஜ், எட்வேட் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது எட்வேட் மற்றும் அங்கிருந்த அடைக்கலம்(55) ஆகியோர் சேர்ந்து தீத்துஸ்மெர்லின்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு குழாய்களாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியதாகவும், இதில் காயமடைந்த தீத்துஸ்மெர்லின்ராஜுக்கு 2 பற்கள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தீத்துஸ்மெர்லின்ராஜ் விஷம் குடித்துவிட்டு, அவரது தந்தை இன்னாசியிடம் நடந்த சம்பவத்தை கூறி அதனால் தான் விஷம் குடித்துவிட்டதாகவும், எட்வேட்டுக்கு தான் கடன் கொடுத்த விவரங்களை டைரியில் குறித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இன்னாசி, தீத்துஸ்மெர்லின்ராஜை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இன்னாசி கொடுத்த புகாரின்பேரில் எட்வேட், அடைக்கலம் ஆகியோர் மீது தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story