மகனை கொன்று புதைத்து நாடகமாடிய தந்தை கைது


மகனை கொன்று புதைத்து நாடகமாடிய தந்தை கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 1:29 AM IST (Updated: 29 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே காணாமல் போனதாக நாடகமாடிவிட்டு மகனை கொன்று புதைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு ஒரு கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரித்த போது, சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு: கலபுரகி அருகே காணாமல் போனதாக நாடகமாடிவிட்டு மகனை கொன்று புதைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு ஒரு கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரித்த போது, சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது.

வாலிபர் மாயம்

கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா நீலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ், விவசாயி. இவரது மகன் அம்பரீஷ் (வயது 18). இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பரீசை தேடிவந்தனர். இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலனஹள்ளி அருகே பீமனஹள்ளி பகுதியில் ஒரு வாலிபர் பாதி எரிந்த நிலையில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்தும் முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த வாலிபர் உடல் பாதி அளவுக்கு மேல் எரிந்திருந்ததால், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் அம்பரீசை தான் மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, உடலை எரித்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அம்பரீசின் தந்தை பீமராவை பிடித்து விசாரிக்கவும், அந்த வாலிபரின் உடலை அடையாளம் காணுவதற்காகவும், விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் கூறி இருந்தனர்.

உடல் புதைப்பு

அதன்படி, பீமராவும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது தனது மகன் காணாமல்போகவில்லை, அவரை நானே கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதாவது அம்பரீஷ் மதுஅருந்திவிட்டு தன்னிடம் தகராறு செய்ததால், அவரை கொலை செய்ததாகவும், தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து, தோட்டத்திலேயே உடலை புதைத்து விட்டதாக பீமராவ் தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் அந்த வாலிபர் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, பாதி எரிந்த வாலிபரின் உடலை பீமராவிடம் போலீசார் காட்டினார்கள். அப்போது அந்த வாலிபர் தனது மகன் இல்லை என்றும், அவரது உடலை தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாகவும் பீமராவ் கூறினார்.

தந்தை கைது

அதைத்தொடர்ந்து, பீமராவ் தோட்டத்திற்கு சென்று, அவரது மகன் அம்பரீஷ் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மகன் காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் அளித்துவிட்டு நாடகமாடியதாக பீமராவ் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவரை பற்றி தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இதுகுறித்து கைதான பீமராவ் மீது முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் முதோல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story