பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்; மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்; மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2021 7:59 PM GMT (Updated: 2021-08-29T01:29:16+05:30)

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்லைக்கழக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்லைக்கழக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள்

மைசூரு பல்கலைக்கழகம், மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் வளாகத்திற்குள் நடமாடக்கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக அறிந்தேன். அதை உடனே வாபஸ் பெறும்படி உத்தரவிட்டுள்ளேன். பெண்களின் சுதந்திரத்தை யாரும் பறிக்கக்கூடாது. அவர்களின் சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது நமது கடமை.

பல்கலைக்கழகங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தகைய கண்காணிப்புகளை பலப்படுத்துவோம். அத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தக்க தண்டனை

இதுகுறித்து அனைத்து துணை வேந்தர்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமாக 32 பல்கலைக்கழகங்கள் உள்ளன. மைசூரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு தவறு செய்தவர்களை கைது செய்துள்ளனர். இதற்காக போலீசாரை பாராட்டுகிறேன். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story