மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு அபராதம்


மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 Aug 2021 7:59 PM GMT (Updated: 28 Aug 2021 7:59 PM GMT)

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாரி: கொரோனா பரவலை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கடந்த 23-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பின்தங்கிய மாவட்டமான பல்லாரியில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி வரும் அவலம் தொடருகிறது. 

அதாவது பல்லாரி மாவட்டம் குருகோடு கோலாரு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 184 மாணவ-மாணவிகள் 9 முதல் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். பள்ளிகள் திறந்து ஒருவாரம் ஆகும் நிலையில் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களை பெற்றோர் கூலி வேலைக்கு அனுப்பிவருகிறார்கள். இதனால் பள்ளிக்கு தினமும் 50-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் வருகிறார்கள். 

எனவே மாணவர்களை வேலைக்கு அனுப்புவதை தடுக்கவும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகமும், பள்ளிகல்வித் துறையும் இணைந்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தண்டோரா மூலம் குருகோடு கோலாரு கிராமத்தில் ஊராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story