நெல்லையில் கேரள பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கேரள பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு விடாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டாலும், ரெயில் போக்குவரத்து தொடருகிறது. இதனால் ரெயில் மூலம் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
எனவே ரெயில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார குழுவினர் முகாமிட்டு உள்ளனர். அங்குள்ள நுழைவு வாசல் பகுதியில் அமர்ந்து, கேரள மாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா இருக்கிறதா? என்பதை கண்டறிய சளி மாதிரியும் சேகரிக்கப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயில் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, மறுநாள் தான் முடிவு தெரிவிக்கப்படுகிறது. எனவே அதுவரை பயணிகள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கி அனுப்பி வைக்கிறார்கள். அவர்களது செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றையும் பதிவு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story