மேகதாது திட்டத்தில் சட்ட போராட்டத்துக்கு தயார்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேகதாது திட்டத்தில் சட்ட போராட்டத்துக்கு தயார் என்றும், இதில் கர்நாடகத்தின் உரிமையை பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேகதாது திட்டத்தில் சட்ட போராட்டத்துக்கு தயார் என்றும், இதில் கர்நாடகத்தின் உரிமைைய பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மேகதாது அணை
கர்நாடக அரசு ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட முடிவு செய்துள்ளது. குடிநீர் மற்றும் மின்சாரம் உற்பத்தியை நோக்கமாக கொண்டு அமைக்கப்படும் இந்த அணையை ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்ட கர்நாடகம் தீர்மானித்து உள்ளது.
இதுதொடர்பான விரிவான அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தடை கேட்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு புதிய மனு
இதற்கிடையே தமிழக அரசு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் புதியதாக ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அதில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய ஜல்சக்தி துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தனது சொந்த மாவட்டமான ஹாவேரியில் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்ட போராட்டம்
மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்த விஷயத்தில் சட்ட போராட்டம் நடத்த நாங்கள் தயாராகி இருக்கிறோம். மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகத்தின் உரிமையை பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஒரு மாதம் ஆகிறது. எனக்கு மக்களின் ஆதரவே பெரிய சக்தி. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. குறுகிய காலத்தில் ஏழைகள், பெண்கள், மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம். சிறந்த ஆட்சி நிர்வாகம் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
தேசிய கல்வி கொள்கை
அரசு அலுவலகங்களில் மக்களுக்கு சேவை விரைவாக கிடைக்க புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளேன். நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். வருகிற 2023-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க பெரிய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். கிராமங்களுக்கு நல்ல தொடர்பு வசதிகள் இருந்தால், அரசின் திட்ட பயன்கள் மக்களை போய் சேரும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் நல்ல சாலைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story