கே.ஆர்.எஸ். அணையில் மத்திய ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு


கே.ஆர்.எஸ். அணையில் மத்திய ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2021 2:38 AM IST (Updated: 29 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கல்குவாரிகளால் ஆபத்து என புகார் வந்தததை தொடர்ந்து கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மத்திய ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மண்டியா: சட்டவிரோத கல்குவாரிகளால் ஆபத்து என புகார் வந்தததை தொடர்ந்து கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மத்திய ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை, கர்நாடக-தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையை சுற்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடப்பதாகவும், இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து இருப்பதாகவும் மண்டியா தொகுதி எம்.பி. சுமலதா அம்பரீஷ் குற்றம்சாட்டி இருந்தார். 

மேலும் இதுதொடர்பாக அவர், மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை நேரில் சந்தித்து புகார் மனுவும் கொடுத்தார். அதில், கே.ஆர்.எஸ். அணையை சுற்றி நடக்கும் சட்டவிரோத கல்குவாரிகளால் அணைக்கு ஆபத்து உள்ளதாகவும், கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

ஜல்சக்தி துறையினர் ஆய்வு

அந்த புகார் மனுவை வாங்கிக் கொண்டு, கே.ஆர்.எஸ். அணையை ஆய்வு செய்ய ஜல்சக்தி துறை அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மத்திய ஜல்சக்தி துறை கூடுதல் செயலாளர் முகர்ஜி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு வந்தனர். 

அவர்கள் கே.ஆர்.எஸ். அணையின் உறுதித்தன்மை, நீர்மட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அணையை சுற்றிலும் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அணையை சீரமைப்பு செய்வது, தண்ணீர் திறக்கும் மதகுகளை மாற்றுவது குறித்து ஆலோசித்தனர். 
இதையடுத்து மத்தய ஜல்சக்தி துறை அதிகாரிகள், காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

Next Story