செல்போனில் குறுந்தகவலுடன் ‘லிங்க்’ அனுப்பி நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.80 ஆயிரம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


செல்போனில் குறுந்தகவலுடன் ‘லிங்க்’ அனுப்பி நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.80 ஆயிரம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2021 4:44 AM IST (Updated: 29 Aug 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் குறுந்தகவலுடன் ‘லிங்க்’ அனுப்பி 2 பெண்களிடம் நூதன முறையில் ரூ.80 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
செல்போனில் குறுந்தகவலுடன் ‘லிங்க்’ அனுப்பி 2 பெண்களிடம் நூதன முறையில் ரூ.80 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறுந்தகவல்
சேலம் தாதம்பட்டி எஸ்.கே.டவுன் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (வயது 52). அவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் மர்ம நபரின் செல்போன் எண்ணில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், உங்களுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கணக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அனுப்பி வைக்கப்பட்ட லிங்கில் உள்ளே சென்று அதை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை உண்மை என்று நம்பிய காந்திமதி, மர்ம நபர் அனுப்பிய லிங்கில் உள்ளே சென்று அதில் கேட்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை தொடர்பான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அனுப்பி உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவருடைய ஏ.டி.எம். எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை
பணம் எடுத்தது தொடர்பாக காந்திமதியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இந்த நூதன மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணும் செல்போனில் வந்த குறுந்தகவல் மூலம் ஏமாந்து ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார். இதுதொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ரகசிய எண்
இதுகுறித்து போலீசார் கூறும் போது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களிடம் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்.மின் ரகசிய எண் ஆகியவற்றை கேட்டால் யாரும் கொடுத்து விட வேண்டாம். இவ்வாறு பேசி எண்களை வாங்கி பணத்தை திருடும் நபர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

Next Story