சங்ககிரியில் டயர் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது


சங்ககிரியில் டயர் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 29 Aug 2021 4:44 AM IST (Updated: 29 Aug 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரியில் டயர் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

சங்ககிரி:
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி இரு சக்கர வாகன டயர்கள் ஏற்றிக்கொண்டு, கர்நாடக மாநிலத்துக்கு சென்றது. அந்த லாரியை தென்காசி மாவட்டம் ராமசாமியாபுரத்தை சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். சேலம் மாவட்டம் சங்ககிரியில் கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் வசித்து வந்ததால், அவரை சந்திக்க டிரைவர் கணேசன், லாரியுடன் சங்ககிரிக்கு சென்றார். அப்போது திடீரென்று லாரியின் ஒரு டயர் வெடித்தது. இதனால் அந்த லாரியை டிரைவர், சங்ககிரி ஊஞ்சக்கொரையில் உள்ள ஒரு சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தார். இதனிடையே நேற்று மாலை 6 மணிக்கு திடீரென்று அந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. லாரியில் இருந்து புகை வந்ததை பார்த்த டிரைவர் கணேசன், சர்வீஸ் நிலையத்தில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. 
இதைத்தொடர்ந்து சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க வாகனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன வாகனம் ஆகியவற்றிலும் தண்ணீரை கொண்டு வந்து பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீயில் லாரியில் ஏற்றி வந்த டயர்கள் முழுவதும் எரிந்து நாசமானது. கன்டெய்னர் லாரியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story