மாயார் ஆற்றின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்ட முடிவு
முதுமலையில் மாயார் ஆற்றின் குறுக்கே ரூ.1¾ கோடியில் சிமெண்டு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கூடலூர்
முதுமலையில் மாயார் ஆற்றின் குறுக்கே ரூ.1¾ கோடியில் சிமெண்டு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
பழுதடைந்த இரும்பு பாலம்
கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோன்று முதுமலையில் உள்ள தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு மற்றொரு சாலை செல்கிறது. இதில் தெப்பக்காடு பகுதியில் மாயாறு ஓடுகிறது. இதன் குறுக்கே ஆங்கிலேயர் கால நூற்றாண்டு பழமை வாய்ந்த இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் 6 டன் எடைக்கு மேல் உள்ள சரக்கு வாகனங்களை இயக்க நெடுஞ்சாலைத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் கனரக வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்படுவதில்லை. மேலும் இரும்பு பாலத்தின் கரையோரம் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
நிதி ஒதுக்கீடு
இந்தநிலையில் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய சிமெண்டு பாலம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். தற்போது புதிய பாலம் கட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் பணிகள் தொடங்கும்
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:- வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சாலை மற்றும் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. புதிய பாலம் கட்டுவதற்கு வனத்துறையின் அனுமதி கோரப்பட்டது.
பின்னர் புதிய பாலம் கட்டுவதற்கு வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கப்படும். தொடர்ந்து மசினகுடிக்கு அதிக எடை கொண்ட வாகனங்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story