‘சீல்’ வைக்காத 694 கடைகளை திறக்க அனுமதி


‘சீல்’ வைக்காத 694 கடைகளை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சீல் வைக்காத 694 கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சீல் வைக்காத 694 கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

வாடகை தொகை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1,587 கடைகள் உள்ளது. இந்த கடைகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. எனினும் உயர்த்தப்பட்ட வாடகை தொகையை செலுத்தாததால் கடந்த 25-ந் தேதி நகராட்சி மூலம் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அனைத்து நுழைவுவாயில்கள் மூடப்பட்டு, பிற கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேக்கம் அடைந்த காய்கறிகள், பழங்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.

கடைகள் திறப்பு

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கோழி, மீன் போன்ற இறைச்சிகளை எடுத்து செல்ல வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடைகளில் மூடி வைக்கப்பட்டு இருந்ததால் வெங்காயம் முளை கட்டியது. மேலும் சில காய்கறிகள் அழுகின. அவை வீணாக கொட்டப்பட்டது. 

கடந்த 25-ந் தேதி முதல் மார்க்கெட்டின் அனைத்து நுழைவுவாயில்கள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காய்கறிகள், பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால், அதை கருத்தில் கொண்டு சீல் வைக்காத கடைகள் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது.

வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள காய்கறிகளை வெளியே எடுத்து வந்து நடைபாதையில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். மேலும் சிலர் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்து வருகின்றனர். உள்பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

ரூ.25 லட்சம் வசூல்

இதுகுறித்து நகராட்சி வருவாய் அலுவலர் (பொறுப்பு) பால்ராஜ் கூறியதாவது:- ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தொடர்ந்து ரூ.25 லட்சம் நிலுவை தொகை வசூலாகி உள்ளது.

மார்க்கெட்டில் சீல் வைக்காத 694 கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. பழங்கள், காய்கறி கடைகள் இதில் அடங்கும். இதற்காக சில நுழைவுவாயில்கள் திறக்கப்பட்டு உள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் வியாபாரிகள் தங்களது நிலுவை தொகையை உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story