தூத்துக்குடியில் பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை
வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராமநாதன் என்ற ரமேஷ் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் முருகேசன் நகரில் உள்ள தனது நண்பர் டேவிட் வீட்டிற்கு சென்றார்.
இரவு நேரம் ஆனதால் ரமேஷ், டேவிட் வீட்டிலேயே தங்கினார். வீட்டின் மொட்டை மாடியில் ரமேஷ் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். டேவிட், அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தனர்.
வெட்டிக் கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரமேஷின் அலறல் சத்தம் கேட்டது. உடனே டேவிட் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு ரமேஷ் மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன் விவரம் வருமாறு:-
திருமண விழாவில் தகராறு
தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண விழா நடந்தது. இதில் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது, திருமண மண்டபத்தில் ஒரு கும்பல் மதுபோதையில் நடனம் ஆடியதால் அங்கு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து ரமேஷ் போலீசாரிடம் அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ரமேசுக்கு செல்போன் மூலம் கொலைமிரட்டல் விடுத்தனர். இதனால் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக முருகேசன்நகரில் உள்ள தனது நண்பரான டேவிட் வீட்டிற்கு ரமேஷ் வந்து மொட்டை மாடியில் தூங்கினார்.
ஆனால் இதை அறிந்த அந்த மர்ம கும்பல் அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி, அங்கு தூங்கி கொண்டு இருந்த ரமேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொைல செய்து விட்டு தப்பி சென்று உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story