பொள்ளாச்சி அருகே தபால் நிலையத்தில் தலைக்கு மேல் ஆபத்து


பொள்ளாச்சி அருகே தபால் நிலையத்தில் தலைக்கு மேல் ஆபத்து
x
தினத்தந்தி 29 Aug 2021 9:44 PM IST (Updated: 29 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தபால் நிலையத்தில் தலைக்கு மேல் ஆபத்து

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சமத்தூரில் உள்ள தபால் நிலையம் மிகவும் பழுதடைந்து உத்திரம் கீழே விழும் நிலையில் உள்ளது. தலைக்கு மேல் உள்ள இந்த ஆபத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தபால் நிலையம்

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தின் கீழ் சமத்தூரில் துணை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையம் சுமார் 15 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்  செயல்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் கட்டிடத்தின் மர உத்திரம், கான்கீரிட் பெயர்ந்து விழாமல் இருக்க 2 பீரோக்களை கொண்டு முட்டுக் கொடுத்து உள்ளனர்.

இந்த நிலையிலும் அங்கு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்களும் பல்வேறு தேவைக்கு சென்று வரும் நிலையில், கட்டிடம் விழுந்தால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு

சமத்தூரில் உள்ள துணை தபால் நிலையத்தில் சுமார் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர். இதை தவிர ஆர்.டி., மாதாந்திர வருமான கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கான்கீரிட் பெயர்ந்தும், மர உத்திரம் முறிந்து விழுந்தன. இதையடுத்து தபால் நிலையத்தில் உள்ள பீரோக்களை கொண்டு உத்திரம் கீழே விழாமல் இருக்க முட்டு கொடுத்து உள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தினமும் உயிர்பயத்துடன் அதிகாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். எனவே தபால் நிலையத்தை வேறு கட்டிடத்திற்கு இடமாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம்

இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள் கூறுகையில், சமத்தூரில் உள்ள துணை தபால் நிலையம் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக வேறு கட்டிடத்திற்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இதற்கிடையில் தபால் நிலையத்திற்கு கட்டிடம் வேண்டி டெண்டர் விடப்பட்டது. ஆனால் யாரும் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கட்டிடம் கிடைக்காததால் மாற்றும் பணி தாமதமாகி வருகிறது. விரைவில் வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என்றனர்.

Next Story