25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை அறுவடை


25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை அறுவடை
x
தினத்தந்தி 29 Aug 2021 4:17 PM GMT (Updated: 29 Aug 2021 4:17 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குறுவை சாகுபடி  
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 88 ஆயிரத்து 750 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு வேளாண் துறையால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறந்ததாலும், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியதாலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பாண்டில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட 40 ஆயிரத்து 448 ஏக்கர் கூடுதலாக பரப்பளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது.
கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
இந்தநிலையில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து எந்திரங்கள் மூலம் குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை அறுவடை செய்யப்பட்டுள்ளது. அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story