சுருக்குமடி வலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு: கடலூருக்குள் நுழைய முயன்ற புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தம் கடலோர பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு


சுருக்குமடி வலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு: கடலூருக்குள் நுழைய முயன்ற புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தம் கடலோர பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 10:29 PM IST (Updated: 29 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக கடலூருக்குள் படகுகளுடன் நுழைய முயன்ற மீனவர்களை போலீசார் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், 

புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதில் பிரச்சினை நிலவி வருகிறது. 

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் நடுக்கடலில் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதற்கிடையே  நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 23 படகுகளில் நேற்று முன்தினம் மாலை கடலூர் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கடலூருக்குள் நுழைய முயற்சி

இதுபற்றி அறிந்த கடலூர் கடலோர காவல் படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் படகுகளில் விரைந்து சென்றனர். அப்போது கடலூர் நோக்கி வந்த, புதுச்சேரி மாநில மீனவர்களை கடலூருக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர்.

பின்னர் அதிகாரிகள் மீனவர்களிடம், நீங்கள் கடலூருக்குள் நுழைந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கடலூர் துறைமுகத்திற்கு வரக்கூடாது என எச்சரித்தனர். இதனால் 23 படகுகளில் வந்த மீனவர்களும் பூம்புகார் நோக்கி சென்றனர்.

போலீஸ் குவிப்பு

தொடர்ந்து புதுச்சேரி மாநில மீனவர்கள் யாரும், கடலூருக்குள் நுழையாதபடி கடலோர காவல் படையினருடன் இணைந்து மீன்வளத்துறை அதிகாரிகள் கடற்கரையோரம் சுழற்சி முறையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் மீனவர்கள் பிரச்சினையில் ஈடுபட்ட போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் புதுச்சேரி மாநிலம் மட்டுமின்றி, கடலூர் பகுதியில் உள்ள கடற்கரையோர கிராமங்களிலும் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கடற்கரையோர கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வஜ்ரா வாகனம் தயார்

அந்த வகையில் நல்லவாடு பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் இருக்க ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் கடற்கரையில் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் கடலூருக்குள் நுழைய முயன்ற புதுச்சேரி மாநில மீனவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தும் வருகின்றனர். 

பூம்புகார் சென்றனர்

இதற்கிடையே அங்கிருந்து  சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடித்து வரும் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த 13 விசைப்படகுகள் நேற்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்கு வந்தன. இதில் 4 விசைப்படகுகளை பழையாறு தற்காஸ் பகுதியிலும், 9 விசைப்படகுகளை பூம்புகார் துறைமுகத்திலும் படகின் உரிமையாளர்கள் மற்றும் சில மீனவர்கள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனர். 

நோட்டீஸ் ஒட்டினர்

பின்னர் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகுகளில் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிக்கும் விசைப்படகுகள் எந்தவிதமான முன் அனுமதி பெறாமல் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பூம்புகார் மற்றும் தற்காஸ் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

1983-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த நோட்டீசில் மீன்வள துறையினர் கூறியுள்ளனர். அண்டை மாநில விசைப்படகுகள் பூம்புகார், தற்காஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
10 மீனவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மீனவர்கள் 3 படகுகளில் கடலூர் சோனாங்குப்பம் நோக்கி நேற்று வந்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள், அவர்களுக்கு ஆதரவாக சோனாங்குப்பம் புறப்பட்டனர்.

கடலூர் சில்வர் பீச் படகு குழாம் அருகில் சென்றதும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள், அவரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். 


இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த அறிவழகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story