வேலூரில் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் 3 தங்கும் விடுதிக்கு அபராதம்
வேலூரில் 3 தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் அந்த விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வேலூர்
வேலூரில் 3 தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாததால் அந்த விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தடுப்பூசி போட அறிவுறுத்தல்
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வீட்டின் அருகே நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான நபர்கள் தினமும் வருகை தருகிறார்கள். அவர்கள் வேலூர்-ஆற்காடு சாலை, காந்திரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.
வேலூருக்கு சிகிச்சைக்காக வரும் வடமாநிலத்தை சேர்ந்த பலருக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்று உறுதியானது. எனவே தங்கும் விடுதிக்கு வரும் அனைவருக்கும் முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவு வந்த பின்னரே அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி போடாத நபர்களை கட்டாயம் தடுப்பூசி போடும்படி அறிவுறுத்த வேண்டும். விடுதியில் பணிபுரியும் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
3 தங்கும் விடுதிக்கு அபராதம்
இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ரவி, அசோக்குமார், சசிகுமார் மற்றும் பலர் வேலூர் காந்திரோடு, பாபுராவ் தெரு, மெயின் பஜார் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது 3 விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சுகாதார பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத ஒரு தங்கும் விடுதியை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
தங்கும் விடுதி ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனரா? என்று கணக்கெடுக்கும் பணி அனைத்து வார்டுகளிலும் நடைபெறும் என்று உதவி கமிஷனர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story