உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது


உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:39 PM IST (Updated: 29 Aug 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் திறக்கப்படாததால், உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1,587 கடைகள் உள்ளது. கடந்த 25-ந் தேதி வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். 3 நாட்கள் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டது. நேற்று முன்தினம் முதல் சீல் வைக்காத 694 கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் ரேஷன் கடைகள், சில கடைகள் உள்பட பிற கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க மார்க்கெட்டுக்கு தினமும் வருகை தருகின்றனர். 5 நாட்களாக மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மக்கள் கூட்டம்

நேற்று அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது. மேலும் தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது. 2 நுழைவுவாயில்கள் வழியாக பொதுமக்கள் வந்தும், சென்றும் இருந்ததால் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்தது. இங்கு விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்கின்றனர். 

பொதுமக்கள் அதிகம் பேர் வாங்கி செல்வதால், காய்கறிகள் விற்று தீர்ந்து விற்பனை அதிகரித்து உள்ளது. வழக்கமாக உழவர் சந்தை மதியம் ஒரு மணிக்கு மூடப்படும். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மதியம் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது. அங்கு வருகிறவர்கள் சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.


Next Story