செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய தாய் கைது


செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய தாய் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:52 PM IST (Updated: 29 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய தாய் கைது செய்யப்பட்டார். நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியானதால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன்(வயது 37). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியை சேர்ந்த துளசி(22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல்(4), பிரதீப்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு துளசி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 

வீடியோ வைரல்

இதற்கிடையே துளசி தனது 2 வயது மகனான பிரதீப்பை கீழே படுக்க வைத்து கையால் குழந்தையின் வாயை தாக்கும் காட்சி மற்றும் குழந்தையின் கால்களை தாக்கும் கொடூரமான காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து சத்தியமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து வடிவழகன் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கருத்து வேறுபாடு காரணமாக நானும் எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி பயன்படுத்திய செல்போனை பார்த்தேன். அதில், பிரதீப்பை துளசி கொடூரமாக தாக்கும் வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த காட்சியை துளசியே செல்போனில் பதிவு செய்துள்ளார். எனவே துளசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். 

தாய் கைது

அதன்பேரில் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் துளசி ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதால் அவரை கைது செய்வதற்காக போலீசார் ஆந்திரா விரைந்தனர். சித்தூர் ராம்பள்ளியில் தனது தாய் வீட்டில் இருந்த துளசியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். 
பின்னர் அவரை செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக தாக்கி துன்புறுத்திய வீடியோ வைரலான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story