விழுப்புரத்தில் 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், ராஜரத்தினம், இளங்கோவன், கதிரவன், பிரசாத், கொளஞ்சி, மோகன், அன்பு பழனி, மீன்வளத்துறை ஆய்வாளர் சந்திரமணி ஆகியோர் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம், மகாத்மா காந்தி ரோடு, மந்தக்கரை, கிழக்கு புதுச்சேரி சாலை, மேலத்தெரு, வடக்குத்தெரு ஆகிய இடங்களில் உள்ள மீன் கடைகள் மற்றும் மீன் சந்தைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
500 கிலோ மீன்கள் பறிமுதல்
இதில் 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த மீன்கள் அழிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற நாள்பட்ட கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story