ரூ.5 கோடியுடன் 6 பேர் சிக்கினர்


ரூ.5 கோடியுடன் 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 29 Aug 2021 5:57 PM GMT (Updated: 2021-08-29T23:27:51+05:30)

காரைக்குடியில் நடந்த வாகன சோதனையில் ரூ.5 கோடியுடன் 6 பேர் சிக்கினர். இது தொடர்பாக 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்குடி, 
காரைக்குடியில் நடந்த வாகன சோதனையில் ரூ.5 கோடியுடன் 6 பேர் சிக்கினர். இது தொடர்பாக 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கார்களில் பணம் 
காரைக்குடி பகுதிக்கு நேற்று 2 கார்களில் கோடிக்கணக்கான ரூபாயுடன் சிலர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.. இதையடுத்து போலீசார் காரைக்குடி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேயன்பட்டி பை-பாஸ் ரோட்டில் வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த கார்களில் 6 பேர் இருந்தனர். 2 கார்களிலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. 
ஆனால் அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து கார், பணத்துடன் 6 பேரையும் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த தகவல் காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு. வினோஜ், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். துணை சூப்பிரண்டு வினோஜ், குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி, காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து...
இதுகுறித்து போலீசார் கூறியதாவது-
சேலத்தில் இருந்து ஒரு காரிலும், சென்னையில் இருந்து ஒரு காரிலுமாக திருச்சியை அடைந்துள்ளனர். அங்கிருந்து 2 கார்களும் சேர்ந்து காரைக்குடியை நோக்கி வந்துள்ளனர். இந்த கார்களில் வந்தவர்கள், 
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 43), மணிகண்டன், சென்னையைச் சேர்ந்த சூர்யகிஷோர்(51), கோவையை சேர்ந்த சண்முகஆனந்த் (46), குமார்(46), திருச்சி காமராஜ் (40) என ெதரியவந்தது.
அவர்கள் வந்த கார்களில் ரூ.5 கோடி ரொக்கப்பணமாக எடுத்து வந்துள்ளனர். ஆனால் அந்த தொகை எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாகத்தான் இங்கு வந்தோம் என்றும், அதற்காகத்தான் பணத்தையும் எடுத்து வந்தோம் என்றும் கூறியுள்ளனர். 
தற்போது அவர்கள் காரில் எடுத்து வந்த பணத்தை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கார்களில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி இருக்கும். 
காரணம் என்ன?
உண்மையிலேயே ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாகத்தான் அவர்கள் இவ்வளவு பெரிய தொகையை காரில் எடுத்து வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story