ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 29 Aug 2021 11:45 PM IST (Updated: 29 Aug 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி:
நாகர்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் சந்திப்பு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், அதன் அருகில் ஏ.டி.எம். மையமும் உள்ளது. 
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வங்கி மேலாளா் ரேஷ்மா அங்கு விரைந்து வந்தார்.
கேமரா ஆய்வு
மேலும் தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, ஏ.டி.எம். எந்திரத்தின் அடிப்பகுதி கம்பியால் உடைக்கப்பட்டு இருந்தது. உடனே, எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த பணம் கொள்ளை போய் உள்ளதா? என அதிகாரிகள் சரி பார்த்தனர். ஆனால் பணம் எதுவும் கொள்ளை போகாததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். 
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியை கொண்டு எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியாததால், மர்ம நபர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மர்மநபர் கைவரிசை
இதையடுத்து வங்கி மேலாளர் ரேஷ்மா இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.

Next Story