அமராவதி அணையிலிருந்து 2,200 கன அடி உபரி நீர் திறப்பு
அமராவதி அணை 88 அடியை தாண்டியதால் 2,200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
க.பரமத்தி,
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.
உபரி நீர் திறப்பு
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 88.49 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து ஆற்றிற்கு 2,200 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. அணையில் 3,943 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே ஆற்றில் திறக்கப்படும். எனவே கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கரூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story