வாகனம் மோதி குட்டியுடன் குரங்கு சாவு
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக, வாகனம் மோதியதில் குரங்கும், அதன் குட்டியும் பரிதாபமாக செத்தன.
பெரம்பலூர்:
சாலையை கடந்தபோது...
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் காரை பிரிவு சாலை அருகே நேற்று மதியம் ஒரு குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குரங்கும், குட்டியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இதனை கண்ட நெடுஞ்சாலைத்துறை ரோந்து எண் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மணி, திலிப்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் உயிரிழந்த குரங்கு மற்றும் குட்டியை கைப்பற்றி, அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மதியம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பிரிவு சாலை அருகே ஒரு குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதி பரிதாபமாக செத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் போலீசார் தான் புதைத்தனர்.
தொடர் சம்பவம்
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இதில் மான் போன்ற விலங்குகள் கிராம பகுதிக்கு வரும்போது நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்போது குரங்குகள் தனது குட்டியை உடலில் சுமந்தவாறு சாலையை கடக்கும்போது, வாகனம் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
எனவே மாவட்ட வனத்துறையினர் வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலையில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில், வாகன ஓட்டிகள் கண்ணில் படும்படியாக வனவிலங்குகள் நடமாடும் பகுதி, மெதுவாக செல்லவும் என எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story