போலீஸ் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
விஜயாப்புராவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஓட்டல் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு:
சிறுமி பலாத்காரம்
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி டவுன் பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலின் உரிமையாளராக தேவிந்த் சங்கோகி என்பவர் இருந்து வந்தார். அந்த ஓட்டலில் ஒருவர் தனது 13 வயது மகளுடன் தொழிலாளியாக வேலை செய்தார். ஓட்டலில் அருகேயே அந்த நபர் தன்னுடைய மகளுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், ஓட்டல் உரிமையாளர் தேவிந்த் சங்கோகி, அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட ஓட்டல் உரிமையாளர் தேவிந்த் சங்கோகியை தேடிவந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர், சிறுமியை பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது.
ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
விசாரணைக்கு பின்பு நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் நிலையத்திலேயே தேவிந்த் சங்கோகியை வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் அவர் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், தேவிந்த் சங்கோகியை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இதற்கிடையில், தேவிந்த் சங்கோகி உயிர் இழந்திருப்பது பற்றி அறிந்ததும், சிந்தகி போலீஸ் நிலையத்திற்கு, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் போலீசார் தான், அவரை அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். தேவிந்த் சங்கோகி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசார் விளக்கம் அளித்தனர். இதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
மேலும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானமாக பேசி, அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.
போலீஸ் நிலையத்தில் வைத்து தேவிந்த் சங்கோகி உயிர் இழந்திருப்பதால், அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சிந்தகியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story