கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை
கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு:
முக்கிய ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 23-ந் தேதி திறக்கப்பட்டன. அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்கள் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகிறார்கள். இந்த நிலையில் 2-வது கட்டமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதில் கர்நாடகத்தில் தற்போது உள்ள கொரோனா பரவல் நிலை குறித்து ஆலோசித்து, பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், அதன் பிறகு 3-வது கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகளை திறக்க அனுமதி
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நாளை (அதாவது இன்று) நிபுணர் குழுவினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கினால், நாங்கள் பள்ளிகளை திறக்க தயாராக இருக்கிறோம்.
குழந்தைகள் பள்ளிக்கு வர ஆர்வமாக உள்ளனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பது எங்களின் நோக்கம். பள்ளிகளில் தேவையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும். அதனால் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தைரியமாக பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story