கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
செங்கோட்டை:
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.
ெகாரோனா பாதிப்பு
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிக்கு வருபவர்களை கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்திற்குள் அனுமதித்து வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும், நேற்றும் ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளதால் பொதுமக்கள் பொருளாதார, வர்த்தக ரீதியாக சிரமங்களில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர்.
சோதனைச்சாவடி
இந்த நிலையில் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கேரள-தமிழக எல்லைப்பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே அந்த சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்தன. இந்த வாரம் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
மருத்துவ பரிசோதனை
புளியரை வாகன சோதனைச்சாவடி அருகே கொரோனா தடுப்பு மருத்துவ சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலத்தூர் ஆரம்ப சுகாதார அலுவலர் தமிழ்செல்வி தலைமையில், டாக்டர் மோதி, சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லையென்றால் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
Related Tags :
Next Story