4 சகோதரர்கள் கொலை வழக்கில் பெண்கள் உள்பட 9 பேர் கைது


4 சகோதரர்கள் கொலை வழக்கில் பெண்கள் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 2:09 AM IST (Updated: 30 Aug 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டையில் 4 சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நிலப்பிரச்சினையில் தீா்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பாகல்கோட்டை:

4 சகோதரர்கள் கொலை

  பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி அருகே மதுரகண்டி கிராமத்தை சோ்ந்தவர் அனுமந்தா உதஹட்டி (வயது 52). இவரது சகோதரர்கள் பசவராஜ் என்ற பசப்பா உதஹட்டி, ஈஸ்வர் உதஹட்டி, மல்லப்பா உதஹட்டி என்பதாகும். இவர்கள் 4 பேரும் விவசாயம் செய்து வந்தார்கள். நேற்று முன்தினம் மாலையில் தோட்டத்தில் உள்ள வீட்டில் சகோதரர்கள் இருந்தார்கள். அப்போது தோட்டத்திற்கு வந்த ஒரு கும்பல் சகோதரர்கள் 4 பேரையும் கோடரி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தாா்கள்.

  தகவல் அறிந்ததும் பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் பாகல்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜமகண்டி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலப்பிரச்சினை

  இந்த நிலையில், போலீஸ் விசாரணையில், நிலப்பிரச்சினையில் ஒரே குடும்பத்தில் 4 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அனுமந்தா உதஹட்டி மற்றும் நிடோனி குடும்பத்தினர் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. நிடோனி குடும்பத்தினரிடம் இருந்து3 ஏக்கர் 21 குண்டே நிலத்தை அனுமந்தா உதஹட்டி குடும்பத்தினர் வாங்கி இருந்தனர். அதில், 21 குண்டே நிலத்தை திரும்ப கொடுக்கும்படி நிடோனி குடும்பத்தினர் கூறிவந்துள்ளார். ஆனால் அனுமந்தா குடும்பத்தினர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

  இதுதொடர்பாக 2 குடும்பத்தினரும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் கிராமத்தில் உள்ள தலைவர்கள் மூலமாக நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தும், முடிவு காண முடியாமல் போனது. இதையடுத்து, நிடோனி குடும்பத்தை சேர்ந்தவர்கள், அனுமந்தா உதஹட்டி குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டு, மராட்டிய மாநிலத்தில் இருந்து சிலரை வரவழைத்துள்ளனர்.

9 பேர் கைது

  பின்னர் நேற்று முன்தினம் மாலையில் அனுமந்தா உதஹட்டி, அவரது சகோதரர்கள் 3 பேரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.இதுதொடா்பாக நந்தீஸ் நிடோனி, நாகப்பா, பரப்பா, சிவானந்த், சங்கர், அம்பவ்வா, ருக்கவ்வா, மாலாஸ்ரீ மற்றும் சுனந்தா ஆகிய 9 பேரை ஜமகண்டி புறநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த கொலை தொடர்பாக 12 பேர் மீது ஜமகண்டி புறநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story