கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு; துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு; துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2021 8:51 PM GMT (Updated: 2021-08-30T02:21:02+05:30)

சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார். துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை:
சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால், துக்கம் தாங்காமல் தாய் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விவசாயி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து கே.எம்.அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பெரியதாய் (வயது 60). இவர்களுடைய மகன் திருமலைகுமார் (32). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.நேற்று முன்தினம் மாலையில் திருமலைகுமார் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய திருமலைகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தற்ெகாலை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் விரைந்து சென்று, இறந்த திருமலைகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மகன் இறந்த துக்கத்தில் பெரியதாய் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று அதிகாலையில் தனது தோட்டத்துக்கு சென்று, மகன் தவறி விழுந்து இறந்த கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சேர்ந்தமரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பெரியதாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததால், துக்கத்தில் தாயும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story