கேரள மாணவர்களை கடத்தி ரூ.10 லட்சம் கொள்ளை
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களை கடத்தி ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்து மிரட்டிய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
2 மாணவர்கள் கடத்தல்
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஸ்டானிஷ் (வயது 22). இவரது நண்பர் முகமது ஷாகீன் (22). இவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவாா்கள். சென்னையில் இருந்து காரில் 2 பேரும் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். ஓசூர் ரோடு அருகே ஆனேபாளையாவில் வரும் போது, அங்கு மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள், மாணவர்களின் காரை வழிமறித்தனர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி ஸ்டானிஷ், மகுமது ஷாகீனை கடத்தினார்கள். பின்னர் அதே காரில் 2 பேரையும் மர்மநபர்கள் கடத்தி சென்றார்கள். காரில் வைத்து பணம் கொடுக்கும்படி கேட்டு மர்மநபர்கள் மிரட்டினார்கள்.
அரை நிர்வாணப்படுத்தி வீடியோ
பின்னர் 2 மாணவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்தை தங்களது வங்கி கணக்குக்கு கத்தி முனையில் மிரட்டி மாற்றிக் கொண்டனர். அதன்பிறகு, நைஸ் ரோட்டிற்கு அழைத்து சென்று, அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் மாணவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். மேலும் 2 மாணவர்களையும் அரை நிர்வாணப்படுத்தியதுடன், அவர்களை கஞ்சா பயன்படுத்தும்படி மர்மநபர்கள் மிரட்டியுள்ளனர். 2 பேரையும் அரை நிர்வாணப்படுத்தியும், கஞ்சா பயன்படுத்துவதை மர்மநபர்கள் வீடியோவும் எடுத்து கொண்டனர்.
நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, அங்கேயே 2 மாணவர்களையும் விட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 2 மாணவர்களும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story