கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2,250 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்-சேலத்தில் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை சைக்கிள் பயணம் கொள்ளும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு நேற்று சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை சைக்கிள் பயணம் கொள்ளும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு நேற்று சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைக்கிள் பயணம்
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சுதந்திரத்தின் அம்ருத மஹோத்ஸவம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 15 வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 22-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம் தொடர்ந்து நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு வந்து சேர்ந்தது. பின்னர் அவர்கள் ஈரோட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 15 வீரர்கள் 8-வது நாளில் நேற்று சேலத்திற்கு வந்தனர்.
சேலத்தில் வரவேற்பு
அப்போது, அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி கமாண்டர் வெங்கடேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் அங்கு திரண்டிருந்த மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்கோட் வரை என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் 2 ஆயிரத்து 250 கிலோ மீட்டர் கடந்து அக்டோபர் மாதம் 2-ந் தேதி டெல்லி ராஜ்கோட்டில் நிறைவடைகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை சேலத்தில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கி தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் வழியாக டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விடுதலையின் சிறப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் விதமாகவும் பயணிக்கும் வழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் சென்று இந்த குழுவினர் பார்வையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story