கொட்டும் மழையிலும் காட்டுயானைகளை விரட்டும் பணி தீவிரம்


கொட்டும் மழையிலும் காட்டுயானைகளை விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:36 AM GMT (Updated: 2021-08-30T14:06:23+05:30)

புளியம்பாறையில் கொட்டும் மழையிலும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கூடலூர்

புளியம்பாறையில் கொட்டும் மழையிலும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

காட்டுயானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, நாடுகாணியில் காட்டுயானைகள் வீடுகள், கடைகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் ஊருக்குள் வரும் காட்டுயானைகளை தடுக்கக்கோரி தேவாலா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஏற்று கடந்த 26-ந் தேதி முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. 

தொடர்ந்து நாடுகாணி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையில் கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கிடையே கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டி வருகின்றனர். 

4-வது நாளாக...

நாடுகாணியில் இருந்து முன்டக்குன்னு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டுயானைகள், அதன்பிறகு கோழிக்கொல்லி வனப்பகுதியில் முகாமிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், வனத்துறையினரால் அங்கு செல்ல முடியவில்லை. மேலும் காட்டுயானைகளும் வனத்துறையினரை விரட்ட தொடங்கின. இதனால் பாதுகாப்பு கருதி தொலைவில் நின்று வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 

இந்தநிலையில் கோழிக்கொல்லியில் இருந்து புளியம்பாறை வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் இடம்பெயர்ந்தன. பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் நேற்று 4-வது நாளாக கொட்டும் மழையிலும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் வனங்களின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் காட்டுயானைகள் வருவது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வந்தனர்.

கும்கிகளின் சாணம்

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணி நடைபெறுவதால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.  எனினும் அவை வெவ்வேறு இடங்களில் உள்ள வனப்பகுதியில் இடம்பெயர்ந்து முகாமிட்டு வருகிறது. கேரள வனத்துக்குள் விரட்டியடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

மேலும் கும்கி யானைகளின் சாணத்தை சேகரித்து காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள கிராம பகுதியில் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாசனையை நுகரும்போது காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவது குறைய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story