வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தகராறு
தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராமநாதன் என்ற ரமேஷ் (வயது 21). இவர் கடந்த 26-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தூத்துக்குடியை சேர்ந்த பரத் என்பவரும் வந்து இருந்தாராம். அப்போது, ரமேசுக்கு நன்கு அறிமுகமான ஒருவருக்கும், பரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், பரத்தை தாக்கிவிட்டு சென்று விட்டாராம். இதுகுறித்து பரத்தின் நண்பர்கள், தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (21), 3-வது மைல் பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (20) ஆகியோருக்கு தெரியவந்தது.
கொலை
இதைத் தொடர்ந்து கடந்த 28-ந் தேதி ராஜபாண்டி, முத்துக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரமேசிடம், தனது நண்பர் பரத்தை தாக்கியவர் குறித்து விசாரித்து மிரட்டினார்களாம். இதனால் ரமேஷ், முருகேசன் நகர் பகுதியில் உள்ள நண்பர் டேவிட் என்பவரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு மொட்டை மாடியில் ரமேஷ் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் ராஜபாண்டி, முத்துக்குமார், முனியசாமிநகர் 1-வது தெருவை சேர்ந்த பிரான்சி்ஸ் மகன் ராகுல் (22) மற்றும் 3 பேர் டேவிட் வீட்டுக்கு வந்து உள்ளனர். வெளியில் 3 பேர் நின்று கொள்ள மாடிக்கு 3 பேர் சென்று ரமேசை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலைக்கு உடந்தையாக டேவிட் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜபாண்டி, முத்துக்குமார், டேவிட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மூர்த்தி (20), பரத் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரையும் கைது செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறி இருப்பதாவது:-
எங்கள் நண்பர் பரத்தை, தாக்கியவரை ரமேசுக்கு நன்றாக தெரியும். இதனால் ரமேசிடம், பரத்தை தாக்கியவர் குறித்த தகவல்களை கேட்டோம். ஆனால் ரமேஷ் தெரிவிக்காமல் இருந்தார். அவர் எங்களுக்கு தெரியாமல் டேவிட்டின் வீட்டில் தங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்று கொலை செய்தோம்.
பின்னர் டேவிட், எதுவும் தெரியாதது போன்று போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து எங்களை கைது செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்த வழக்கில் ராகுல் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராகுல், ராஜபாண்டி ஆகியோர் கொலை சம்பவத்துக்கு முன்பு, தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story