3-ம் கட்ட தேர்தலை எதிர்த்து சாலை மறியல்


3-ம் கட்ட தேர்தலை எதிர்த்து சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Aug 2021 2:29 PM GMT (Updated: 30 Aug 2021 2:29 PM GMT)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 3-ம் கட்ட தேர்தலை எதிர்த்து தூத்துக்குடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல 3-ம் கட்ட தேர்தலை எதிர்த்து தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமண்டல தேர்தல்

தூத்துக்குடி- நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டல தேர்தல் கடந்த 16-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த திருமண்டலத்துக்கு உட்பட்ட நாசரேத் சேகரத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 16-ந் தேதி நடந்தது. இதன் மூலம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேகர மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக இந்த சேகரத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளுக்கான தேர்தல் ஆகஸ்டு 21-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு நாளை (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரத்து

இந்த நிலையில் நாசரேத் சேகரத்தில் 2-ம் கட்ட தேர்தலை நடத்தாமலேயே சேகர செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட தேர்தலை கடந்த 28-ந் தேதி நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த தேர்தலை ரத்து செய்து ஏரல் தாசில்தார் இசக்கிராஜா உத்தரவிட்டார்.

சாலை மறியல்

இந்தநிலையில் நாசரேத் சேகரத்துக்கான 3-ம் கட்ட தேர்தலை தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்த திருமண்டல நிர்வாகிகள் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எதிர் தரப்பினர் வக்கீல் ஜெயக்குமார் ரூபன் தலைமையில் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்கள் 2-ம் கட்ட தேர்தலை நடத்திய பிறகே 3-ம் கட்ட தேர்தலை நடத்த வேண்டும். மேலும், சம்பந்தம் இல்லாத இடத்தில் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது என கூறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story