திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 2:29 PM GMT (Updated: 2021-08-30T19:59:25+05:30)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோவில், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

முருகபவனம்:
மாவட்டம் முழுவதும் கோவில், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 
கிருஷ்ண ஜெயந்தி
பகவான் கிருஷ்ணர், ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி நாளில், ரோகினி நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த சிறப்புமிக்க நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் உறியடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் கிருஷ்ண ஜெயந்தியன்று ஏராளமானோர் விரதம் மேற்கொண்டு தங்களது வீடுகளில் குழந்தைகளின் பாதம் வரைந்து, அவர்களுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அதன்படி, நேற்று கோவில், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கிருஷ்ணன் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உறியடி திருவிழா மற்றும் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோவிலுக்கு வந்த சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
உறியடி நிகழ்ச்சி
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில், கோபாலசமுத்திரம் பால ஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
திண்டுக்கல் பாலமரத்துப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதேபோல் சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வீதிகளில் கோலாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். . 
வீடுகளில் வழிபாடு
சின்னாளப்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஆஞ்சநேயர், கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதேபோல் சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டியில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவில், கோபால்பட்டி கிருஷ்ணன் கோவில், வேம்பார்பட்டி பெருமாள் கோவில் மற்றும் பட்டிவீரன்பட்டி, சின்னாளப்பட்டி, பழனி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
மேலும் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விரதம் இருந்து வழிபட்டனர். முன்னதாக தங்களது வீடுகளில் குழந்தைகளை கிருஷ்ணராக பாவித்து, அவர்களது பாதங்களை வீடுகளில் கோலமிட்டனர். 

Next Story