ஆசிரியர் வீட்டில் கம்ப்யூட்டர் வெடித்து தீப்பற்றியது
கூடலூரில் ஆசிரியர் வீட்டில் கம்ப்யூட்டர் வெடித்து தீப்பற்றியது. இதில் பீரோவில் இருந்த நகைகள் தீயில் கருகி நாசமாகின.
தேனி :
தேனி மாவட்டம் கூடலூர் 20-வது வார்டு மதிப்பனூர் பெருமாள் தேவர் சந்து தெருவை சேர்ந்தவர் அழகேசன் (வயது 38). இவர் கூடலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு ஜெயரூபன் (11) என்ற மகனும், ஷமிருதா என்ற மகளும் உள்ளனர். நேற்று அழகேசன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.
வீட்டில் ஜெயரூபன் மட்டும் இருந்தான். அவன் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் வைத்திருந்த கம்ப்யூட்டருக்கு செல்லும் வயரில் திடீரென்று தீப்பிடித்தது. இதை பார்த்த ஜெயரூபன் அருகே உள்ள தனது தாத்தா தெய்வேந்திரன் வீட்டுக்கு ஓடிச்சென்று கூறினான்.
அதற்குள் கம்ப்யூட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த அறை முழுவதும் தீ பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடனே கம்பம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் மரப்பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் மெத்தை, கட்டில், டி.வி., மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story