10 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு


10 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு
x

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டது.

உத்தமபாளையம்: 

உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர். இங்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை அரங்கு பூட்டி கிடந்தது. 

நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராமமூர்த்தி (வயது 35) என்பவர் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நேற்று அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பாரதி தலைமையில், மயக்கவியல் டாக்டர் மனோஜ், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வைரவன் மற்றும் மருத்துவ குழுவினர், ராமமூர்த்திக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர். 

இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், தற்போது அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டு, குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிகிச்ைச பெற சிறப்பான டாக்டர்கள் குழுவினர் தற்போது உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.


Next Story